புரட்சித் தலைவி அம்மா. அமீரா சிக்கந்தர் பேகம்...


<><><><><><><><><><><><><><>

ஆலம்கீர் என்று மக்களால் வாய் நிறைய அழைக்கப்பட்ட மாமன்னர் அவுரங்க ஜேப் (1618 -  1707) அவர்கள் இறந்த பின் அரச குடும்பத்தில் குழப்பங்கள் பரவின. அதிகாரப் போட்டியால் அரச குடும்பம் வலிமையிழந்தது.

அவுரங்கஜேபின் விரிந்த ஆளுகைக்குட்பட்ட (நிலப்பரப்பின் மாகாண ஆளுநர்கள், அதிகாரிகள் ஆகியோர் தத்தமது பகுதிகளை தனி அரசாக அறிவித்துக் கொண்டனர்.

தோஸ்த் முஹம்மது கான் என்ற ராணுவத் தளபதி போபால் பகுதியை தன்னுடைய தனி அரசாக அறிவித்து கொண்டார். கி.பி 1722 (ஹிஜ்ரி 1145) ஆம் ஆண்டில் அவர் தன் மனைவி பத்ஹ் பீபீ பெயரால் “பத்ஹேகர் என்றொரு கோட்டையைக் கட்டினார். பின்னர் ஹிஜ்ரி 1153-ல் அவர் மரணமடைந்தார்.

இவரைத் தொடர்ந்து போபால் நாட்டில் பனிரெண்டு அரசர்கள் ஆட்சிக்கு வந்துள்ளனர். கி.பி 1949ஆம் ஆண்டு போபால் நாடு இந்தியாவுடன் இணைக்கப்பட்ட காலம் வரை.

இதில் என்ன சிறப்பம்சம் என்று கேட்கிறீர்களா? சொல்கிறேன். அந்தப் பனிரெண்டு அரசர்களில் நால்வர் பெண்கள். அதாவது சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் 33% சதவீத இடஒதுக்கீடு உயர்ப்பதவியில் பெண்கள் பெற்றுள்ளனர்.

அமீரா குத்சியா பேகம், அமீரா சிக்கந்தர் பேகம், அமீரா ஷாஹ்ஜஹான் பேகம், அமீரா சுல்தான் ஜஹான் பேகம் அந்த நால்வர். இவர்களைத் தான் வரலாறு “பேகம்ஸ் ஆஃப் போபால்”[BEGUMS OF BHOPAL] என்றழைக்கிறது.

இவர்கள் நால்வரின் ஆட்சியிலும் போபால் வளம் மிக்கதாகத் திகழ்ந்தது. பொது சுகாதாரம், பெண்களின் கல்வி, ராணுவம், காவல்துறை, நீதித்துறை, சிறைத்துறை, பொதுப்பணித்துறை முதலிய பல்வேறு துறைகளில் சீர்த்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இருப்பினும் இந்நால்வரிலும் நம் மனக்கதவை வேகமாகத் தட்டியவர் அமீரா சிக்கந்தர் பேகம் அவர்களே.

போபால் நவாப் நழ்ர் முஹம்மது கான், குத்சியா பேகம் தம்பதியினரின் மகளாக கி.பி 1818 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 12ஆம் நாள் பிறந்தார் சிக்கந்தர் பேகம்(ஹிஜ்ரி 1233 ஷவ்வால் பிறை 28)  இவர் பதிமூன்று மாதக் குழந்தையாக இருந்த போதே தந்தை நவாப் நழ்ர் முஹம்மது கான் மரணமடைந்தார்.

தனக்கு ஆண்வாரிசு இல்லையென்பதால் தன் ஒரே மகள் சிக்கந்தர் பேகத்தை அரசியாக்க விரும்பினார். பதிமூன்று மாதக் குழந்தையை எப்படி அரசியாக்குவது!
அதனால் தன் மனைவி குத்சியாவை அரசியாக்கி, மகளின் திருமணத்துக்குப்பின், மருமகன் அரசராவார் என்று மரண சாசனம் சொன்னார் நவாப் நழ்ர் அவர்கள்.
கி.பி 1835-ல் (ஹிஜ்ரி 1250) சிக்கந்தர் பேகம் ஜஹாங்கீர் என்பவரை மணந்தார்.

போபால் நவாபாகவும் ஜஹாங்கீர் ஆனார். 1844 ஆம் ஆண்டு வியாதியுற்று மரணமடைந்தார் ஜஹாங்கீர்.
அடுத்த நாவாப் யார் என்பதில் சர்ச்சை, குழப்பம். அரசக் குடும்பத்திலுள்ள ஆண்களின் சதிகளையும், சூழ்ச்சிகளையும் வீழ்த்தி 1860 ஆம்- ஆண்டில் போபாலின் பேகமாக சிக்கந்தர் பேகம்  பொறுப்பேற்றார். இதற்காக அவர் பிரிட்டனின் உதவிகளையும் பெற்றார்.

அதுவரை இந்தியாவில் நடைமுறையிலிருந்து வந்த நிலப்பிரபுத்துவ முறைக்கு முற்றுப் புள்ளிவைத்தார் இதன் தொடர்ச்சியாக மனிதர்களை மனிதர்கள் அடிமைகளாக நடத்தும் மனிதாபிமானமற்ற செயலும் முடிவுக்கு வந்தது.

முன்னர் இருந்த ஆட்சியாளர்களின் ஆடம்பர, உல்லாச வாழ்வின் காரணமாக கடனில் மூழ்கியிருந்த போபாலின் அரசுக்கடன் அனைத்தையும் அடைத்தார்.
ராணுவத்தை பலப்படுத்தினார். பொருளாதார சீர்திருத்தங்களை அமல்படுத்தினர். ஏராளமான பள்ளிக் கூடங்களையும் கல்வி நிறுவனங்களையும் திறந்தார். சாலைகளை விரிவுபடுத்தினார். போக்குவரத்து வசதிக்காக புதிய பாலங்களைக் கட்டினார். நீதிமன்றங்களின்  எண்ணிக்கையை அதிகப்படுத்தினார். ஏறத்தாழ எல்லா பகுதிகளிலும் ஒரு நீதிமன்றம் இருந்தது. நீதியைப் பெற்றிட நீதிமன்றங்களைத் தேடி மக்கள் வெளியூர் செல்ல வேண்டிய தேவை ஏற்படவில்லை.

இவை எல்லாவற்றையும் விட முக்கியமானது ஒன்று உண்டு. அதுதான் அவருடைய ஹஜ்பயணம்.
இந்தியாவிலிருந்து குடிமக்கள் பலர் சுதந்திரத்துக்கு முந்தைய காலத்தில் ஹஜ் பயணம் சென்றுள்ளனர். ஆட்சியாளர்கள் எவருமே சென்றதில்லை என்றொரு குறை உண்டு.

இந்தியாவிலிருந்து ஹஜ்ஜுக்கு சென்ற ஒரே ஒரு முஸ்லிம் ஆட்சியாளர் சிக்கந்தர் பேகம் அவர்களே.

கி.பி 1863 நவம்பர் 5 -ஆம் நாள் (ஹிஜ்ரி 1280ஜமாதுல் ஊலா பிறை -22) போபால் நகரத்திலிருந்து பயணம் புறப்பட்டார். 1864 ஜனவரி 6 ஆம் நாள் பம்பாயிலிருந்து புறப்பட்ட இவரது ஹஜ்கப்பல் 1864 ஜனவரி 23 ஆம் நாள் ஜித்தா துறைமுகத்தில் நின்றது.

இவருடன் ஆயிரக் கணக்கான ஆண்களும், பெண்களும் மூன்று கப்பல்களில் சென்றனர். ஏராளமான தங்க ஆபரணங்கள் ஆடைகள், கொண்டு சென்று வழியெங்கும் சந்தித்த மக்களுக்கு வாரி வழங்கினார். சிக்கந்தர் பேகம். ஆறுமாத காலத்துக்குப் பின் 21.07.1864ல் போபாலுக்கு திரும்பினார்.

பிரிட்டன் அதிகாரிகளுடன் மோதல் போக்கை கடைபிடிக்காமல் மக்கள் நலன்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த சிக்கந்தர் பேகம் பல்வேறு சீர்திருத்தங்கள் மூலம் மக்கள் மனங்களை வென்றார். புரட்சித் தலைவியாக இதயங்களில் நின்றார்.

இவர் தன் ஹஜ் பயண அனுபவங்களை ஒன்பது தொகுதிகள் கொண்ட நூலாக உருது மொழியில் எழுதியுள்ளார்.
இப்போதைய பெண் அதிகாரிகள் பெண் முதல்வர்கள், பெண் ஆட்சியர்களின் நிர்வாகத்தி றனையும் முடி வெடுக்கும் துணிச்சலையும் நாம் பார்க்கும் போதெல்லாம் சிக்கந்தர் பேகம் நம் மனத்திரையில் வந்து மறைகிறார்.

30.-10.-1868 (ஹிஜ்ரி -1285 ரஜப் பிறை -12) அன்று இவ்வுலகை விட்டு மறைந்த அவரின் சாதனைத் தடங்கள் இன்னும் மறையவில்லை.

ஒருவர் மறைந்த பின்னர் எவ்வளவு காலத்துக்கு அவர் பேசப்படுகிறார் என்பது அவரது சாதனைகளின் அளவைச் சொல்லிவிடும். அமீரா சிக்கந்தர் பேகம் இன்றும் பேசப்படுகிறார் அன்றும் பேசப்பட்டார். இனியும் பேசப்படுவார்.

-  இன்னும் தட்டுவார்கள்.
இல்யாஸ் ரியாஜி.
பிறைமேடை இதழில் வெளியான கட்டுரை.

Comments

கிலாபா ஏன் தேவை?

மஹ்தி (அலை) அவர்களை பற்றிய குறிப்பு..

உதுமானிய கிலாபா!!!

முஹம்மத் அல் ஃபாத்திஹ்!!!