மஹ்தி (அலை) அவர்களை பற்றிய குறிப்பு..

மஹ்தி (அலை) அவர்களைப் பற்றிய தொடர்ச்சி  பகுதி  3

இப்னு கஸீர் (ரஹ்) அவர்கள் அல்பிதாயா வந்நிஹாயா என்ற நூலில் கூறுகிறார்கள்:-
 وَهُوَ أَحَدُ الْخُلَفَاءِ الرَّاشِدِينَ، وَالْأَئِمَّةِ الْمَهْدِيِّينَ، وَلَيْسَ هُوَ بِالْمُنْتَظَرِ الَّذِي تَزْعُمُ الرَّافِضَةُ، وَتَرْتَجِي ظُهُورَهُ مِنْ سِرْدَابِ سَامَرَّا، فَإِنَّ ذَلِكَ مَا  لَا حَقِيقَةَ لَهُ،وَلَا عَيْنَ، وَلَا أَثَرَ، وَيَزْعُمُونَ أَنَّهُ مُحَمَّدُ بْنُ الْحَسَنِ الْعَسْكَرِيُّ

   “மஹ்தி என்பவர் குலஃபாவுர் ராஷிதீன்களில் ஒருவராவார்;நேர்வழிபெற்ற இமாம்களில்(கலீஃபா) ஒருவராவார்.அவர் ராஃபிளியாக்கள் (ஷியாக்கள்) காத்திருக்கும் ஒருவரல்ல;அது அவர்களால் புனையப்பட்டதாகும். ஸாமரா குகையில் ஒளிந்துள்ள அவர் மீண்டும் திரும்புவார் 
என்பது உண்மைக்கு புறம்பானதாகும்; அவர் தலைமை தாங்கவும் மாட்டார்; அவருக்கு இதில் சம்பந்தமில்லை; 

இது (அலி (ரலி) அவர்களின் பரம்பரையில் வந்த அவர்களின் பன்னிரண்டாவது இமாமான) முஹம்மது இப்னு ஹஸன் அல்அஸ்கரி மீது (ராஃபிளியாக்கள்) இட்டுக்கட்டியதாகும்”
கலீஃபா மஹ்தி குறித்த முன்னறிவிப்புகள், இஸ்லாம் தடைசெய்த தேசியவாதத்தை தூக்கியெறிந்து உலகளாவிய முஸ்லிம்களோடு இணைந்து கிலாஃபத்தை நிறுவுவதற்காக உழைக்கும் சகோதர சகோதரிகளை உற்சாகமூட்டுகிறது.

சிலர் தங்களுடைய சோம்பலையும் இயலாமையையும் பொறுப்பற்ற தன்மையையும் நியாயப்படுத்துவதற்காக, இமாம் மஹ்தி குறித்த முன்னறிவிப்புகளை தங்களின் மனப்பாங்கிற்கு ஏதுவாக சித்தரித்து, தன்னையும் ஏமாற்றி பிறரையும் ஏமாற்ற விழைகின்றனர். இவர்களின் ஊசலாட்டத்தினால், தற்போதைய குழப்பமான சூழ்நிலையையும், குஃப்ரின் ஆதிக்கத்தையும் அகற்ற முடியாது என்ற சிந்தனை முஸ்லிம்கள் மத்தியில் மலிந்து விட்டது. 

மேலும் வரவிருக்கின்ற மஹ்தி அவர்கள் முஸ்லிம்களால் பைஆ ஒப்பந்தம் பெற்று கலீஃபா பொறுப்பை திறம்பட நிறைவேற்றி  உம்மத்தை ஒரே குடையிலாக்கி கிலாஃபத்தை செழித்தோங்க செய்வார்  என்பதால்,அதற்கு முன்னர் கிலாஃபத்திற்காக எந்த முயற்சிகளையும் மேற்கொள்ளக்கூடாது என்றும், அவ்வாறு உழைப்பதால் எந்த பயனும் இல்லையென்றும் கூறி தங்கள் மீதுள்ள கடமையை தட்டிக்கழிக்கின்றனர்.
முன்னறிவிப்புகளிருந்து பெறவேண்டிய பாடம்

ஸஹாபாக்கள் நபி صلى الله عليه وسلمஅவர்களிடமிருந்து நேரடியாக  இந்தவகையான முன்னறிவிப்புகளை நற்செய்தியாக பெற்றபோதும்,அதை அடைவதற்காக அயராது உழைத்தார்கள்.முதலில் இஸ்லாமிய அரசை நிறுவவும், மதீனாவில் அந்த அரசு நிறுவப்பட்டபின் அதை பலப்படுத்தவும், இஸ்லாமிய அரசின் ஆளுமையை பரவச்செய்யவும் கடுமையாக உழைத்தனர். 

நபிصلى الله عليه وسلم  அவர்களின் மரணத்திற்கு பிறகு ஸஹாபாக்கள் கலீஃபாக்களை பைஆ மூலம் நியமித்தனர்.அந்த நேர்வழிபெற்ற கிலாஃபத்தின்மூலம் இஸ்லாத்தின் ஒளியை பெரும்பாலான பகுதிகளுக்கு கொண்டு சேர்த்தார்கள்.

وَعَرَضَ لَنَا صَخْرَةٌ فِي مَكَانٍ مِنَ الخَنْدَقِ، لَا تَأْخُذُ فِيهَا الْمَعَاوِلُ، قَالَ: فَشَكَوْهَا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَجَاءَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ عَوْفٌ:، وَأَحْسِبُهُ قَالَ: وَضَعَ ثَوْبَهُ ثُمَّ هَبَطَ إِلَى الصَّخْرَةِ، فَأَخَذَ الْمِعْوَلَ فَقَالَ: «بِسْمِ اللَّهِ» فَضَرَبَ ضَرْبَةً فَكَسَرَ ثُلُثَ الْحَجَرِ، وَقَالَ: «اللَّهُ أَكْبَرُ أُعْطِيتُ مَفَاتِيحَ الشَّامِ، وَاللَّهِ إِنِّي لَأُبْصِرُ قُصُورَهَا الْحُمْرَ مِنْ مَكَانِي هَذَا» . ثُمَّ قَالَ: «بِسْمِ اللَّهِ» وَضَرَبَ أُخْرَى فَكَسَرَ ثُلُثَ الْحَجَرِ فَقَالَ: «اللَّهُ أَكْبَرُ، أُعْطِيتُ مَفَاتِيحَ فَارِسَ، وَاللَّهِ إِنِّي لَأُبْصِرُ الْمَدَائِنَ، وَأُبْصِرُ قَصْرَهَا الْأَبْيَضَ مِنْ مَكَانِي هَذَا» ثُمَّ قَالَ: «بِسْمِ اللَّهِ» وَضَرَبَ ضَرْبَةً أُخْرَى فَقَلَعَ بَقِيَّةَ الْحَجَرِ فَقَالَ: «اللَّهُ أَكْبَرُ أُعْطِيتُ مَفَاتِيحَ الْيَمَنِ، وَاللَّهِ إِنِّي لَأُبْصِرُ أَبْوَابَ صَنْعَاءَ مِنْ مَكَانِي هَذَا

  “கந்தக் போரில் அகழ் தோண்டும்போது ஒரு பகுதியில் எந்த சம்மட்டியாலும் உடைக்க முடியாத பாறை ஒன்று குறுக்கிட்டது. அதைப்பற்றி நபி صلى الله عليه وسلم அவர்களிடம் நாங்கள் முறையிட்டோம். 

நபிصلى الله عليه وسلم  அவர்கள் பிஸ்மில்லாஹ் என்று கூறி சம்மட்டியால் ஓர் அடி அடித்துவிட்டு, அல்லாஹு அக்பர்! ஷாம் தேசத்தின் பொக்கிசங்கள் எனக்கு கொடுக்கப்பட்டுள்ளன; நான் இப்போது அங்குள்ள செந்நிற கோட்டைகளை பார்க்கிறேன் என்றார்கள்.பின்பு இரண்டாவது முறையாக அப்பாறையை அடித்தார்கள்; 

அல்லாஹு அக்பர்! பாரசீகத்தின் பொக்கிஷங்கள் எனக்கு கொடுக்கப்பட்டுள்ளன என்றார்கள்! அல்லாஹ்வின் மீது ஆணையாக! மதாயின் நகரத்தின் வெள்ளை மாளிகையை இப்போது பார்க்கிறேன் என்றார்கள்.பின்பு மூன்றாவது முறையாக பிஸ்மில்லாஹ் என்று கூறி அடித்தார்கள்; மீதமிருந்த கல்லும் உடைக்கப்பட்டது.

அல்லாஹு அக்பர்! எனக்கு எமன் தேசத்து பொக்கிஷங்கள் கொடுக்கப்பட்டுள்ளன; அல்லாஹ்வின் மீது ஆணையாக இந்த இடத்திலிருந்து ஸன்ஆ நகரத்தின் தலைவாயில்களை பார்க்கிறேன் என்றார்கள் ”
(பரா இப்னு ஆஜிப்(ரலி, முஸ்னத் அஹ்மது)

நபி صلى الله عليه وسلم அவர்களால் முன்னறிவிப்பு செய்யப்பட்டும், ஸஹாபாக்கள் அத்தகைய நிகழ்வுகள் தானாக நடந்தேறும் என்று காத்திருக்கவில்லை.மாறாக இவ்வாறான முன்னறிவிப்புகளால் உந்தப்பட்டு அந்த பகுதிகளை இஸ்லாத்திற்காக திறந்துவிட கிலாஃபா அரசுடன் இணைந்து போரிட்டு இஸ்லாத்தின் ஒளியை அங்கு ஏற்றினார்கள்.

ஆகவே இமாம் மஹ்தி அவர்கள் குறித்த முன்னறிவிப்புகள், இப்போது உலகை ஆதிக்கம் செலுத்திவரும் குஃப்ரின் அழிச்சாட்டியத்தை வேரோடு பிடுங்கியெறியும் பணியில் ஈடுபட்டுள்ளவர்களை  ஊற்சாகமூட்டுகிறது. மேலும் மஹ்தி அவர்களின் வருகைக்கு முன்னர் வாழும் முஸ்லிம்கள் எவ்வித முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கவேண்டும் என்பதையும் உணர்த்துகிறது.

மஹ்தி அவர்களைப்பற்றி வரும் ஹதீஸ்கள் கிலாஃபத்தை நிறுவுவதற்கான கோரிக்கையை முன்வைக்கவில்லை. அந்த ஹதீஸ்களின் எதார்த்தநிலையை நோக்கும்போது إِخْبارِي – தகவல் தருபவை (informative) என்ற நிலையிலேயே உள்ளன. 

இக்பாரி(إِخْبارِي) நிலையிலுள்ள மஹ்தி தொடர்பான ஹதீஸ்கள், சொல்லப்பட்ட காலகட்டத்தோடு தொடர்புடையவையாக இருப்பதால், அப்போது இருக்கும் எதார்த்த நிலையை இன்றைய நிலையோடு ஒப்பிடமுடியாது. 

இமாம் மஹ்தியோடு தொடர்புபடுத்த முடியாத நிலையில் வாழும் இன்றைய காலகட்ட முஸ்லிம்களுக்கு, மஹ்தி  காலத்தில் நிகழும் சம்பவங்கள் குறித்த இக்பாரி(إِخْبارِي) ஹதீஸ்களிருந்து ஹுகும் எடுக்க முடியாது. மேலும் கிலாஃபா இருக்கும் அப்போதைய எதார்த்தநிலையை, கிலாஃபா இல்லாமல் இருக்கும் இன்றைய நிலையோடு ஒப்பிடவும் முடியாது.

எனினும் முன்னறிவிப்பு தொடர்பான ஹதீஸ்களை  ஸஹாபாக்கள் விளங்கி செயல்பட்டதுபோன்று  ஏனைய முஸ்லிம்களும் விளங்கி செயல்பட கடமைப்பட்டுள்ளார்கள். இஸ்லாத்தின் செய்தியை இந்த பூமி முழுவதும் கொண்டு செல்வதற்கு அயராது உழைக்கவேண்டும் என்பதையே இமாம் மஹ்தி தொடர்பான ஹதீஸ்களும், இஸ்லாம் இந்த பூமியெங்கும் சென்றடையும் என்பதாக வந்துள்ள மற்ற ஹதீஸ்களும் முஸ்லிம்களுக்கு உணர்த்துகின்றது.

அல்லாஹ் سبحانه وتعالى அருளிய சட்டங்களைக் கொண்டு ஆட்சி செய்ய வேண்டியதும் இஸ்லாத்தின் செய்தியை இந்த உலகிகிற்கு இஸ்லாமிய அரசு மூலம் கொண்டு செல்லவேண்டியதும் கட்டாயக்கடமை என்பதால் அதற்காக கிலாஃபத்தை நிறுவ வேண்டியது இன்றைய காலத்தில் வாழும் முஸ்லிம்கள் மீது கட்டாயமாகிறது.
கிலாஃபத்தை நிலைநாட்டுவது கட்டாயக்கடமை

நபி صلى الله عليه وسلمஅவர்களின் காலத்திலிருந்து கிலாஃபா தகர்க்கப்பட்ட காலம்வரை நடைமுறைப் படுத்தப்பட்ட ஷரீஆ சட்டங்கள் மீண்டும் நிலைநிறுத்தப்பட வேண்டுமெனில், கிலாஃபத்தை மீண்டும் நிலைநிறுத்த வேண்டியது கட்டாயமாகிறது.

ஷரிஆ சட்டங்கள் கியாம நாள்வரை வாழும் முஸ்லிம்களை கட்டுப்படுத்தும். இப்போது ஷரிஆ சட்டங்களை நடைமுறைப்படுத்த பூமியில் இஸ்லாமிய அரசு இல்லாத காரணத்தால், அந்த ஷரிஆ சட்டங்களை இமாம் மஹ்தியின் காலத்தோடு மட்டும் தொடர்புபடுத்துபவர் உண்மையான முஃமின் ஆகமாட்டார். 

இமாம் மஹ்தி அவர்கள் காலத்தில் இறங்கிவரும்  ஈஸா عليه السلام அவர்கள், முஹம்மது நபி صلى الله عليه وسلم  அவர்களின் ஷரீஆவை பின்பற்றி நடப்பவர்களாகவே இருப்பார்கள்.  ஈஸா عليه السلام அவர்கள் இனி நபியாக இராமல், உம்மத்திலிருந்து ஒருவராகவே இருப்பார்கள் என்பது திட்டவட்டமாகும். 

முஹம்மது நபி صلى الله عليه وسلم  அவர்களின் தூதுத்துவத்திற்கு பிறகு வருகைதரும்  ஈஸா عليه السلام அவர்களே அந்த ஷரீஆ சட்டங்களிருந்து விதிவிலக்கு பெறமுடியாத நிலையில், மஹ்தி அவர்களின் வருகை ஒரு முஃமினை எப்படி இஸ்லாத்தை நிலைநாட்டுவதிலிருந்து விலகியிருக்க தூண்டும்?

கிலாஃபா இல்லாத சூழ்நிலையில் வாழும் முஸ்லிம்கள் என்ன செய்யவேண்டும் என்ற ஹுகும் ஷரீஆவை பொறுத்தவரை, இன்றைய யதார்த்த நிலைக்கு ஏற்றவாறு அமைந்திருக்கும் ஹதீஸ்களை விளங்கிக் கொள்வது அவசியமாகிறது.
وَمَنْ مَاتَ وَلَيْسَ فِي عُنُقِهِ بَيْعَةٌ، مَاتَ مِيتَةً جَاهِلِيَّةً

  “எவரேனும் தமது   கழுத்தில்  (கலீஃபாவின்)   பைஆ இல்லாத நிலையில்  மரணம் அடைவாரேயானால்  அவர்  ஜாஹிலிய்யத்தின் மரணத்தை அடைந்தவராவார்”
 (இப்னு உமர் (ரலி),  முஸ்லிம்)

இந்த ஹதீஸ் கலீஃபாவிற்கு செய்யவேண்டிய பைஆ இல்லாமல் ஒரு முஸ்லிம் இருக்கக்கூடாது என்பதை தெளிவாக உணர்த்துகிறது. 

ஒவ்வொருவரின் கழுத்திலும் அந்த பைஆ இல்லாமல் இருப்பது பாவம் என்பதால், கலீஃபா இல்லாத சூழ்நிலையில் அதற்கான உழைப்பில் ஈடுபடுவர் அந்த பாவத்திலிருந்து தப்பித்து விடுவார் என்பதையும், அந்த உழைப்பை செய்யாமல் இமாம் மஹ்தியிடம் பொறுப்பை சாட்டுபவர் ஒருபோதும் தப்பிக்க முடியாது என்பதையும் அறிந்து கொள்ளலாம்.

Comments

கிலாபா ஏன் தேவை?

உதுமானிய கிலாபா!!!

முஹம்மத் அல் ஃபாத்திஹ்!!!