கம்யூனிச அரசின் வதை முகாம்!!!




சீனாவில் உள்ள உய்கூர் முகாமில் பல்வேறு சித்ரவதைகளை அம்மக்கள் அனுபவித்து வருகிறார்கள். இதனை முகாமில் இருந்து வெளிவந்த நபர்களே தெரிவிக்கின்றனர்.
மறுகல்வி முகாம் எனும் பெயரில் சித்ரவதை முகாம்
காய்ராட் சமர்காண்ட், தான் முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக அருகில் இருக்கும் கஜகஸ்தானுக்கு பயணம் செய்ததற்காக என்னை கைது செய்தனர். 

கைது செய்து மூன்று நாட்கள் தீவிர விசாரணைக்கு பிறகு "மறுகல்வி முகாம்" என்று அழைக்கப்படும் சித்ரவதை முகாமில் மூன்று மாதம் அடைத்தனர். அங்கே இருக்கும் மக்கள் அனைவரும் மூளைச்சலவைக்கும் அவமானத்திற்கும் உள்ளாக்கப்படுகிறார்கள். 

ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட நேரத்திற்கு கம்யூனிஸ சித்தாந்தங்களை படிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுகின்றனர். அதே போல் சீன அதிபர் XI ஜிங்பிங்கை புகழ்ந்தும் அவர் நீண்ட காலம் வாழ வேண்டும் என்றும் பாடல் பாட வேண்டும்.

யாரெல்லாம் இதை பின்பற்றவில்லையோ, படிப்பதற்கு தாமதாக வந்தார்களோ, பாடுவதற்கு மறுத்தார்களோ அவர்களை 12 மணி நேரத்திற்கு கைகளிலும், கால்களிலும் விலங்கு போட்டு கட்டி வைப்பார்கள். அதன்பிறகும் இப்படியான தவறுகள் நடக்கும் போது பல மணி நேரத்திற்கு தண்ணீர் பீய்ச்சி சித்ரவதை செய்வார்கள் அல்லது நீண்ட நேரம் புலி நாற்காலி எனப்படும் பொறியில் உட்கார வைப்பார்கள், அது தாங்க முடியாத வேதனையை தரக்கூடியதாக இருக்கும். 

இதனை எல்லாம் தான் அங்கே அனுபவித்ததாக சொல்கிறார்.
கராகாமி என்ற கிராமத்தில் உள்ள ஓர் முகாமில் மட்டும் 5700 பேர் இந்த முகாமில் அடைக்கப்பட்டிருக்கின்றனர். இவர்கள் அனைவரும் உய்கூர் மற்றும் கஜக்ஸ் முஸ்லிம்கள். இந்த முகாமில் அடைப்பதற்கு எந்த குற்றமும் செய்ய வேண்டியதில்லை. 

வெளிநாடுகளில் பணிபுரிந்தால், வெளிநாடுகளுக்கு சென்று வந்தால், வெளிநாடுகளில் இருந்து ஃபோன் அழைப்பு வந்தால், அதை விட மேலாக, மசூதிகளில் தொழுதால் அவர்களை முகாமில் அடைத்து விடுவார்கள் என்கிறார் சாமர்கண்ட்.

30 வயதுள்ள மனிதர் மொத்தம் மற்ற வேறு 14 பேருடன் சித்ரவதை முகாமில் உள்ள ஒரு அறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் அறையை தினமும் விடியற்காலையில் ஏதாவது ஒளித்து வைக்கப்பட்டுள்ளதா என்று ஆய்வு செய்வார்கள். அதன் பிறகு, அந்த நாள் கம்யூனிச சித்தாந்த பாடங்களையும் சீன அரசின் கொள்கைகளையும் இரண்டு மணி நேரம் படிக்க வேண்டும். 

அறையில் இருக்கும் அனைவரும் கம்யூனிசம் தொடர்பான பாடல்களையும் சீன அதிபரை புகழும் பாடல்கலையும் பாட வேண்டும். இப்படியே தினசரி நாள் கழியும்.
ஓமிர் பெகாலி, கஜக் முஸ்லிம் இனத்தவர். தன் பெற்றோரை பார்க்க வரும் போது கைது செய்யப்பட்டிருக்கிறார். 

தனக்கு நேர்ந்த கொடுமைகளை விவரிக்கிறார், காலை 6.30 மணிக்கு கொடி ஏற்றுதலுடன் நாள் தொடங்கும். அதற்கு பிறகு கம்யூனிசத்தின் புரட்சி பாடல்கள் பாடப்படும். காலை உணவுக்கு பிறகு எல்லோரும் 10 நிமிடம் சீன அதிபரை புகழ்ந்தும் கம்யூனிச இயக்கத்தை புகழ்ந்தும் பாடல் பாடப்பட வேண்டும். உள்ளிருப்பவர்கள் அனைவருக்கும் தேசிய கீதம் மற்றும் கம்யூனிச பாடல்கள் கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும். 

இது போல் நிறைய பாடல்களை பாட வேண்டும்.பாட மறுத்தால் உணவு கிடையாது, உட்கார முடியாது, படுக்க முடியாது. நீங்கள் ஒரு ரோபோட்டை போல மாற்றப்படுவீர்கள் அவர்கள் என்ன சொல்கிறார்களோ அதை கண்டிப்பாக செய்ய வேண்டும். உணவும் மோசமாக இருக்கும். அதனால் "Food Poisoning" அடிக்கடி பலருக்கு ஏற்படும். சில நேரங்களில் இஸ்லாமியர்களுக்கு தடுக்கப்பட்ட பன்றி கறி உண்ண வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுவார்கள். 

ஆன்மிக நாட்டம் அதிகமாக உள்ளவர்களுக்கு, கட்டாயப்படுத்தி மது குடிக்க வைக்கப்படுவார்கள். இந்த முகாம்களில் 80 வயது முதியவர்கள், பால் கொடுக்கும் தாய்மார்கள், அதிகமான இளைஞர்கள் எல்லாம் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். அதுமட்டுமல்ல முகாமில் வழக்கறிஞர்கள், மருத்துவர்கள்,ஆசிரியர்கள் என அனைவரும் அடைக்கப்பட்டிருக்கிறார்கள் என்கிறார்.

பெகாலி தன்னிடமிருந்த சொத்துகளை செலவழித்து மீண்டும் கஜகஸ்தான் சென்று தற்போது வாழ்ந்து வருகிறார். ( Washington post 17.05.18)
சீனாவின் இத்தகைய கொடூரமான நடவடிக்கையை மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பு கண்டித்துள்ளது.
மனித உரிமை ஆர்வலர்களையும் சிறைப்படுத்தும்
சீனாவின் இந்த கொடூர அடக்குமுறைக்கு எதிராக சர்வதேச அளவில் போராடும் மனித உரிமை போராளிகளும் சீன அரசால் காணாமல் ஆக்கப்படுகின்றனர்.

ஆனால் உய்கூரில் உள்ள ஓர் சகோதரர்களின் கதை சற்று வித்தியாசமானது. தாஹிர் இமின் உய்கூர் முஸ்லிம் இனத்தவர் அமெரிக்காவில் வாழ்கிறார். சீனாவின் அடக்குமுறைக்கு எதிராக நிறைய போராட்டங்களை செய்துள்ளார். இதற்காக உய்கூரில் உள்ள அவரது சகோதரரை சீனா சித்ரவதை முகாமில் அடைத்துள்ளது. இமின் சகோதரன் மட்டுமல்ல அவரது உறவினர்கள் மூவரையும் சீன அரசு சிறைப்படுத்தியுள்ளது. இதை பற்றி இமின் சொல்லும் போது, என்ன செய்வதென்று எனக்கு தெரியவில்லை. 

எப்படி என் சகோதரனையும், என் உறவினர்களையும் மீட்க முடியும் என்பதும் தெரியவில்லை. நான் சீன தூதரகத்திடம் கடிதம் மூலம் கேள்வி எழுப்பியிருக்கிறேன். ஆனால் எப்படியும் பதில் வராது என்று எனக்கு தெரியும் என்கிறார்.
இமின் தன் சகோதரன் ஆதில் பற்றி மேலும் அழுது கொண்டே புலம்புகிறார். அவன் குழந்தைகள் மீது அதிக அன்புடையவன் அவனுக்கு மூன்று குழந்தைகள். 

இப்போது யார் அவர்களை பார்த்துக்கொள்வார்கள். இதுவரை அவன் வெளிநாடுகளுக்கு பயணம் செய்தது கிடையாது. மசூதிக்கு கூட அவன் செல்வது கிடையாது. அவனை போய் கைது செய்து அடைத்திருக்கிறார்கள்.

- Abu siddiq

Comments

கிலாபா ஏன் தேவை?

மஹ்தி (அலை) அவர்களை பற்றிய குறிப்பு..

உதுமானிய கிலாபா!!!

முஹம்மத் அல் ஃபாத்திஹ்!!!