மத்ஹப்!!!

ஒரு மத்ஹபின் இமாம், வஹீயின் வழிகாட்டுதலின்படி உருவாக்கிக் கொண்ட ஒரு தனித்துவமான மூல ஃபார்முலா (எனும் உஸூலின்) விதிக்குட்பட்டு குறிப்பிட்டதொரு கோணத்தில், அல்குர்ஆன் மற்றும் சுன்னாவை ஆய்வுக்குட்படுத்தி, ஏதேனும் ஒரு மஸாயிலுக்கான சட்டத்தை அதிலிருந்து யாத்துத் தருவதையே இஜ்திஹாத் என்போம்.

அந்த ஆய்வின் முடிவுகளையெல்லாம் குறித்த அந்த மத்ஹபின் ஃபிக்ஹ் சட்டங்கள் எனவும் சொல்ல முடியும்.

அதாவது ஏதேனும் ஒரு மஸாயிலில், அல்லாஹ்வின் கட்டளை எதுவென இந்த அறிஞர் இஸ்தின்பாத் செய்கிறார். சுயமாக எக்கருத்தையும் அவ்விதிகளில் அவர் நுழைக்க அனுமதி இல்லை.  அப்படி எவரேனும்  தமது கருத்தை நுழைக்கும் பட்சத்தில் அவர் ஈமானை இழந்தவராக கணிக்கப்படுவார். 
(எனவே தாம் அல்ஹாக்கிம் எனும் தலைப்பிட்டதொரு பாடத்தையும் தத்தமது ஃபிக்ஹ் நூலில் அனேகமாக முஜ்தஹித்  இமாம்கள் இணைப்பது வழக்கம். 'ஹாக்கிம்-- சட்டமியற்றுபவன்' என்பது, அல்லாஹ்வின் பெயர்/தன்மைகளில் ஒன்று).

அல்குர்ஆன் மற்றும் சுன்னா எனும் வஹீயை ஆகச் #சிறந்த_முறையில் எந்த முஜ்திஹிதுடைய உஸூல் கூடுதல் திறனோடு அனுகுவதாக ஒரு சாமானியர் கணிப்பாரோ, அந்த குறிப்பிட்ட முஜ்தஹிதின் மத்ஹபுச் சட்ட விதிகளை மேற்படி முகல்லித் தக்லீத் செய்துகொள்ள முடிவு செய்வார். (அதாவது அவர் மாலிக்கையோ, ஜஃபரையோ, ஷவ்கானியையோ, ஷாஃபியையோ அல்லது வேறெவரையுமோ தெரிவு செய்து கொள்வார்)

இஜ்திஹாத் செய்ய திறனில்லாத அனைவருமே முகல்லித் எனும் பின்பற்றுவோர் ரகத்தை சார்ந்தோர் தாம். எனினும் இதில் அறிவு ஞானத்தைப் பொறுத்து முகல்லித் முத்தபீ, முகல்லித் ஆம்மீ என இருவகையினருண்டு.
முன்னவர் மிகச் சாதாரண சட்டவியல் அறிவு பெற்றிருக்க பிந்தையவர் தமது இமாம் சமர்ப்பிக்கும் ஆதாரத்தின் நிலையை விளங்குமளவுக்கு சற்றே கூடுதல் ஞானம் பெற்றவராகத் திகழ்வார்.

அரபியிலிறங்கிய வஹீயிலிருந்து நேரடியாக ஒரு சாமானியன் சட்டம் யாத்துக் கொள்ளும் ஆற்றலை பெறமாட்டான். அஹ்காம் ஷரீஆவை இஸ்தின்பாத் செய்வதற்கென தனித்துவமான சில ஆற்றல்கள் அவசியம்.

ஒரு எளிய உதாரணம் இக்கருத்தை விளக்கக்கூடும். மனிதனின் உடலமைப்பு அனேகமாக எல்லோருக்கும் ஒன்றே. எனினும்,  நம்மில் ஒருவரது உடலில் ஏதேனும் நோய் காணப்படுமிடத்து அந்த நோயாளி இன்னொரு மருத்துவரைத்தான் நாட முடியும்.  இருவரிடமுள்ள உடலமைப்பு ஏறத்தாழ ஒன்றாகினும், ஒரு மனித உடலில் உண்டாகக்கூடிய நோயின் தன்மையும் அந்த நோய்க்கான சரியான மருத்துவத் தீர்வையும் ஒரு மருத்துவர்தான் முறையாக கற்றுத் தேர்ந்திருப்பார்.

அதிலும் அந்த மருத்துவர் பாண்டித்தியம் பெற்றுள்ள துறையில் தாம் துள்ளியமாக சிகிச்சையளிக்க இயலும்.

விஷயம் இப்படி இருக்க போதிய ஞானம் இல்லாமல் வஹியை  ஒவ்வொருவரும் தானே நேரடியாக, வெறும் தர்ஜுமாக்களைக் கொண்டு அணுகி, சட்டம் யாத்துக் கொள்ள முற்படுவது பேராபத்தாகும். இன்னும் அனுமதியற்ற செயல்பாடுமாகும்.

மருத்துவர் ஒருவர் மேற்கொள்ளும் ஆய்வும், பயாலஜிஸ்ட்  எனப்படும் வேறொரு துறையில் திறன் பெற்ற ஆய்வாளரும் கூட சமமாக இயலாத போது எப்படி மொழியாக்கம் செய்யப்பட்ட வஹீயிலிருந்து அஹ்காம் ஷரீஆ விதிகளை ஒரு சாதாரண ஞானமுடையோர் இஸ்தின்பாத் செய்ய இயலும்? நம் உடல் நோவுக்கு தீர்வு காண உடற்கூறியலாலரிடம் நாம் செல்வதில்லை. இத்தனைக்கும் அந்த பயாலஜிஸ்டுக்கு மனித உடலின் அனைத்து அவயங்களும் அத்துப்படியான ஒன்று தாம்.

அகீதா போன்ற அசலான கொள்கையை பொறுத்தமட்டில், அதை விளங்கிட சாதாரண ஞானமே ஒருவருக்கு போதுமானது. எனவே இதில் தக்லீது செய்வது ஹராமாகும். அது போக புத்திசுவாதீனமுள்ள ஒவ்வொருவரிடமும் அல்லாஹுத்தஆலா ஈமான் குறித்து மறுமையில் கேள்வி எழுப்புவான். ஆனால் அஹ்காம் ஷரீஆ விதிகள் இப்படியானதல்ல. விபரம் அறிந்தோரிடம் நாம் கேட்டுப் பெற்றுக் கொள்ளத் தக்க அளவில் உலகின் நிலையை அல்லாஹ் அமைத்துள்ளான்.  சட்டங்களை யாக்க சற்று கூடுதல் ஞானம் தேவை. இந்த ஞானத்தை பெற்றுக் கொள்ள வேண்டுவோர் இதற்கென சில கல்வியை பெற்றுத்திகழ்ந்தேயாக வேண்டும். அதாவது மருத்துவம் படித்தோர் தாம் வைத்தியம் பார்க்க வேண்டும் என்கிற அம்சத்தை போல. 

ஆனால் அகீதாவை விளங்க தனித்துவமான ஆற்றல் அவசியமில்லை. ஏனென்றால் பசிக்கும் போது உணவை உண்ண வேண்டும் என்பதோ அதை வாயால் உண்ண வேண்டும் என்பதோ எந்த சாமானியனுக்கும் தெரிகின்ற விடயம் என்பதால்.  எனவே அகீதாவையும் அஹ்காம் ஷரீஆவையும் ஒன்றரக் குழப்பிக்கொள்வதுடன் தக்லீதே ஹராம் தான் என சகாக்கள் வாதிக்க வேண்டாம்.

- Abukka

Comments

கிலாபா ஏன் தேவை?

மஹ்தி (அலை) அவர்களை பற்றிய குறிப்பு..

உதுமானிய கிலாபா!!!

முஹம்மத் அல் ஃபாத்திஹ்!!!