ஹிக்மத்! ஓர் பார்வை.

ஹிக்மத்! ஓர் பார்வை.

ஹிக்மத் என்ற வார்த்தையை இன்று படித்த முஸ்லிம் முதல் பாமர முஸ்லிம் வரை பாவிக்கின்றனர்! ஆனால் ஹிக்மத் என்றால் என்ன? என்ற விடயத்தில் வஹியின் பார்வையில் ஹிக்மத் என்ற சொல்லுக்கு வழங்கப்பட்டுள்ள அர்த்தம் பற்றி சிலர் புரிந்து மறுக்கின்றனர்! சிலர் புரியாது பயன்படுத்துகின்றனர் என்பதே கசப்பான உண்மையாகும்!

ஒரு தேசியத்தின் சிறுபான்மை எல்லைக்குள் வரையறுக்கப்பட்ட ஒரு முஸ்லிம் அதிகாரத்திலுள்ள பெரும்பான்மை சமூகத்திடம் தனக்கான வாழும் உரிமையை பெற அவர்கள் அச்சப்படும் அல்லது கேள்விக்குட்படுத்தும் மார்க்க அடையாளங்களை விட்டுக் கொடுத்து அல்லது பெரும்பான்மையை திருப்திபடுத்தும் அளவுக்கு மாற்றங்களுடன் வெளிப்படுத்தும் சரணடைவு அரசியலையும் ஒரு பக்கம் ஹிக்மத் என்ற வார்த்தையை கொண்டு வரைவிலக்கணம் தருகின்றனர்!

நகைப்புக்கிடமான இன்னொரு விடயம் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழும் இடங்களிலும் இஸ்லாத்தை அமுலாக்கம் செய்யும் விடயத்திலும், ஆளும் குப்ரிய மேலாதிக்க உலகை திருப்திப்படுத்தும் வெளிநாட்டு அரசியலிலும் (foreign policy ) உள்நாட்டு அரசியல் வழிமுறைகளிலும்  (Internal Policies) இந்த ஹிக்மத் என்ற நியாயத்தை பேசி நிற்கின்றனர்!

ஒட்டுமொத்தமாக இன்றைய குப்ரிய மேலாதிக்க உலகில் புதிதாக அருளப்பட்ட ஒரு வஹியாக இந்த ஹிக்மத் என்ற வார்த்தை மாறியுள்ளது என்றால் அது மிகையாகாது! இந்த அடிப்படையில் வஹியின் கண்ணோட்டத்தில் இந்த ஹிக்மத் என்ற வார்த்தையின் உண்மை அர்த்தத்தை நாம் புரிந்து கொள்வது எம்மீது கட்டாயமாகின்றது.

ஹிக்மத் என்பதற்கு நற்பண்புகள் ஞானம் என்றெல்லாம் வஹி விளக்கம் கூறினாலும், அதைவிட உறுதியான அர்த்தத்தில் நபிமார்களுக்கு அருளப்பட்ட ஒரு விசேட ஆற்றலாக இந்த ஹிக்மத்தை அல்லாஹ் (சுப) குறிப்பிடுவதை நாம் முதலில் அவதானிக்க கடமைப்பட்டுள்ளோம். அல்குர்ஆன் இதுபற்றி பின்வருமாறு கூறுகிறது.

மேலும் அவன் (ஈஸா(அலை) ஆகிய) அவருக்கு வேதத்தையும், ஹிக்மத்தையும், தவ்றாத்தையும், இன்ஜீலையும் கற்பிப்பான். (3:48)

...பின்னர் (தாவூத்(அலை) ஆகிய) அவருக்கு அல்லாஹ் அரசுரிமையையும் ஹிக்மத்தையும் அளித்து தான் நாடியவற்றை அவருக்கு கற்பித்தும் கொடுத்தான்..... (2:251)

.....இப்றாஹீமுடைய(அலை) குடும்பத்தினருக்கு வேதத்தையும் ஹிக்மத்தையும் கொடுத்தோம் மகத்தான அரசாங்கத்தையும் அவர்களுக்கு நாம் கொடுத்தோம்.
                                                (4:54)

மேலும் (நபியுடைய மனைவிகளே!) உங்கள் வீடுகளில் ஓதப்படும் அல்லாஹ்வின் வசனங்களையும் (அல்குர்ஆன் எனும் வஹியையும்), ஹிக்மத்(எனும் சுண்ண)த்தையும் நினைவு கூறுங்கள்;...... (33:34)

போன்ற வசனங்கள் ஹிக்மத் என்பதை வஹியாக அல்லது வஹியின் பிரதான பகுதியாக குறிப்பிடுவதுடன் 33:34ம் வசனப்பிரகாரம் ஹிக்மத் என்பதை ரசூல்(ஸல்) அவர்களின் சொல் செயல் அங்கீகாரம் என்ற சுண்ணாவை குறிப்பதாகவும் காணலாம். இவ்வாறு நோக்கும்போது ஹிக்மத் மூலம் அழையுங்கள் அல்லது செயற்படுங்கள் என்பதற்கு அண்ணலாரின் அழகிய முன்மாதிரியை முற்றிலும் கடைப்பிடிப்பதாக நாம் புரிந்திடல் அவசியமாகும். இந்த அடிப்படையில்

(அல்லாஹ்) தான் விரும்பியவர்களுக்கு ஹிக்மத்தை கொடுக்கிறான். ஆதலால் எவர் ஹிக்மத் கொடுக்கப் பெறுகிறாரோ அவர் நிச்சயம் அனேக நன்மைகளை பெற்றிடுவார். (2:269)

என்ற வசனத்திற்கு நாம் பொருள் எடுக்கும் போது முற்றிலும் சுண்ணாவின் அறிவின் மூலமும் தெளிவின் மூலமும் ஒரு முஸ்லிம் தான் எதிர்கொள்ளும் சகல விவகாரங்களிலும் நடப்பதையே ஹிக்மத் (அறிவு ஞானம்) என்பதாக நாம் புரிந்திடல் அவசியமாகும்.

இதை உறுதிப்படுத்தும் விதமாக ஹிக்மத் என்பதற்கு அல்குர்ஆன் என தப்ஸீர் ஜலாலைன் விளக்கமளிக்க, தப்ஸீர் இப்னு கஸீர் ஹிக்மத் என்பது அல்லாஹ்வால் அருளப்பட்ட குர்ஆனும் சுண்ணாவும் என விளக்கம் தருகிறது. மேலும் தப்ஸீருல் முயீன் ஹிக்மா என்பதற்கு களங்கமற்ற தெளிவான ஆதாரங்கள்(வஹி) என விளக்கமளிக்கின்றது.

மேலும் இமாம் ஷவ்கானி(ரஹ்) அவர்கள் தப்ஸீர் பத்ஹுல் கதீரின் சுருக்கமான 'சுப்ததுத்தப்ஸீர்' விளக்கத்தில் ஹிக்மா என்பதற்கு "தெளிவான ஸஹீஹான வார்த்தைகளாகும்" எனக் கூறுகிறார்.
மேலும் இமாம் ஷமஹ்ஷரியின் அல் கஸ்ஸாப் எனும் நூலிலும் தப்ஸீர் அல் ஹாசினிலும் ஹிக்மா என்பதற்கு உறுதியான ஆதாரங்களை உடைய வார்த்தையென்றும் சத்தியத்தை தெளிவுபடுத்தி சந்தேகத்தை தீர்க்க தகுந்த ஆதாரம் என விளக்கமளிக்கின்றது.

மேற்கூறிய ஆதாரங்களின் அடிப்படையில் ஹிக்மத் என்பது சூழ்நிலை வாதத்தை அனுசரித்து வஹியை மறைத்து விளையாடும் விளையாட்டல்ல என்பதும் வஹியின் ஆதாரத்தின் அடிப்படையில் தன் சொல்லாலும் செயலாலும் ஒரு மனிதன் தொழிட்படுவதையே குறிக்கும் எனவும் நாம் புரிந்து கொள்ளலாம். அல்லாஹ் யாவற்றையும் நன்கறிந்தவன் மிக்க கிருபையுடையவன்.

- Abdur Raheem

Comments

கிலாபா ஏன் தேவை?

மஹ்தி (அலை) அவர்களை பற்றிய குறிப்பு..

உதுமானிய கிலாபா!!!

முஹம்மத் அல் ஃபாத்திஹ்!!!