முஸ்லிம்களின் பிரச்சனைக்கு கிலாபத்தே ஒரே தீர்வு - இலங்கை...

நேற்றைய(26.03.2018) நவமணி பத்திரிகையில் பிரசுரமான ஊடகவியலாளர் M .I முபாறக் அவர்களினால் எழுதப்பட்ட முஸ்லிம்களின் பிரச்சனைகளுக்கு  கிலாபாத்தே தீர்வு என்ற கட்டுரை. 👇👇


#முஸ்லிம்களின்_பிரச்சினைகளுக்கு_கிலாபத்தே_ஒரே_தீர்வு
===============

முஸ்லிம்களுக்கு எதிரான கண்டிக் கலவரத்தைத் தொடர்ந்து முஸ்லிம்களின்
பாதுகாப்பு தொடர்பில் நாம் சிந்திக்கத் தொடங்கியுள்ள தருணம் இது.

இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் முஸ்லிம்கள் எதிர்நோக்குகின்ற
இனவாத-பாதுகாப்புப் பிரச்சினைகளுக்கு எப்படிப்பட்ட தீர்வுகள்
முன்வைக்கப்பட்டாலும் அவை அனைத்தும் தற்காலிகமானவையே தவிர நிரந்தரமானவை அல்ல என்பதையும் எம் எல்லோரையும் படைத்த அல்லாஹ்வால் சிபாரிசு செய்யப்படுகின்ற கிலாபத் ஆட்சி  முறையே நிரந்தரமான தீர்வு என்பதையும்
தெளிவுபடுத்துவதே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்.

கிலாபத் என்றதும் இப்போது ஐ.எஸ் பயங்கரவாதிகள் கூறித் திரியும் போலிக்
கிலாபத் என்று நினைத்துவிட வேண்டாம்.

அது கிலாபத் பற்றி பிழையாகச்
சித்திரித்து முஸ்லிம்களே கிலாபத்தை வெறுக்க வைப்பதற்காக அமேரிக்கா
செய்யும் சதியாகும்.

நாம் இங்கு சொல்ல வருவது இறைத்தூதர் முஹம்மது நபி [ஸல்]அவர்களும்
கலீபாக்களும் சேர்ந்து இறைவனின் விருப்படி ஆட்சி செய்த-மிகவும்
வெற்றிகரமாக செயற்படுத்திக் காட்டிய-முஸ்லிம்களும் முஸ்லிம்
அல்லாதவர்களும் பாதுகாப்பாகவும் நிம்மதியாகவும் வாழ்வதற்கு
வழியேற்படுத்திய- ஏகாதிபத்திய சுரண்டல் ஆட்சியர்களுக்கு சாவு மணியாக
அமைந்த உண்மையான கிலாபத் ஆட்சி முறை பற்றியதாகும்.

இஸ்லாமிய விரோதிகளால் கவிழ்க்கப்பட்டு இப்போது நடைமுறையில் இல்லாத இந்தக் கிலாபத் முறை மீண்டும் மலர்ந்தால் அது எப்படி முஸ்லிம்களுக்கு நிரந்தரப்
பாதுகாப்பை வழங்கும் என்பதையும் கிலாபத் மீண்டும் உருவாகாமல் தடுப்பதற்கு அமெரிக்கா எப்படியான சதித் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது என்பதையும் இந்தக் கட்டுரையில் மேலோட்டமாகப் பார்ப்போம்.


அமெரிக்காவின் சதி
================
உலகில் முஸ்லிம்கள் எங்கெல்லாம் வாழ்கிறார்களோ அங்கெல்லாம்
பிரச்சினைகள்தான். எல்லாமே திட்டமிட்டு உருவாக்கப்பட்ட
பிரச்சினைகள்.அந்தந்த நாடுகளில் காணப்படும் அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ப வெவ்வேறு வடிவங்களில் பிரச்சினைகள் உருவாக்கப்பட்டு முஸ்லிம்கள் நசுக்கப்படுகின்றனர்; அழிக்கப்படுகின்றனர்.

முஸ்லிம் அல்லாத நாடுகளில் வாழும் முஸ்லிம்கள் அந்த நாடுகளில் வாழும்
பெரும்பான்மை இன மக்களை வைத்து அழிக்கப்படுகின்றனர். இலங்கை, இந்தியா மற்றும் மியன்மார் போன்ற நாடுகளில் இந்த நிலைமையைக் காணலாம்.

முஸ்லிம் நாடுகளில் வாழும் முஸ்லிம்கள் முஸ்லிம்களாலேயே
அழிக்கப்படுகின்றனர்.

அந்த நாடுகளில் உள்நாட்டுக் குழப்பங்கள்- யுத்தங்கள்
ஏற்படுத்தப்படுகின்றன. ஆயுதக் குழுக்கள் உருவாக்கப்படுகின்றன. அந்த ஆயுதக் குழுக்கள் அரசுக்கு எதிராகப் போராடுதல் என்ற பெயரில் மக்களைக் குறிவைக்கின்றன.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இந்த நிலைமையைக் காணலாம்.

இந்த நாடுகளில் தினமும் அப்பாவி மக்கள் கொன்று
குவிக்கப்படுகின்றனர்.

நேரடியாகவே அப்பாவி மக்கள் குறி வைத்து குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றனர். இவ்வாறான ஆயுதக் கலாசாரம் உள்ள
நாடுகளில் அரச படையினரையும் ஆயுதக் குழுக்களையும் விட அப்பாவி மக்களே அதிகம் கொல்லப்படுகின்றனர்.

அரசை வழிக்குக் கொண்டு வருவதற்காகவே இவ்வாறு மக்கள் இலக்கு வைக்கப்படுகின்றனர் என்றொரு காரணத்தை இந்தப் பயங்கரவாதிகள் கூறுகின்றனர்.

மேலும்,இந்த பயங்கரவாதிகளை மக்கள் வெறுக்க வேண்டும்
என்பதற்காக படையினரும் மக்கள் மீது தாக்குதல் நடத்திவிட்டு
பயங்கரவாதிகளின் தலையில் பழியைப்  போடுகின்றனர்.

இவ்வாறு இரண்டு தரப்புகளும் மக்களைத்தான் கொல்கின்றன. இந்த இரண்டு தரப்புகளையும் வழிநடத்துவது ஒரே ஆள்தான்.

அதுதான் அமேரிக்கா தலைமையிலான
இஸ்ரேல் மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள்.

இந்த ஆயுதக் குழுக்களின் உருவாக்கத்துக்கு கவர்ச்சிகரமான-முஸ்லிம்களை
ஈர்க்கக்கூடிய- மார்க்கத்துடன் தொடர்புடைய தலைப்புகள்
வைக்கப்படுகின்றன. இலக்கை அடைவதற்காக எந்த எல்லைக்கும்
செல்லலாம்; இஸ்லாத்துக்காக எதையும் செய்யலாம்; எவரையும் கொல்லலாம் என்று அந்த ஆயுதக் குழுக்களுக்குப் போதிக்கப்படுகிறது; மூளைச் சலவை செய்யப்படுகிறது.

இஸ்லாத்தைப் பற்றி அறியாது மூர்க்க குணம் கொண்ட வாலிபர்கள்
தேர்ந்தெடுத்து இணைத்துக் கொள்ளப்படுகின்றனர்.

மறுபுறம், இவர்களை உருவாக்கிய
அமேரிக்காவே  அந்தக் குழுக்கள் இயங்கும் நாடுகளின் அரசுடன் சேர்ந்து
அமைதியை ஏற்படுத்துதல் என்ற பெயரில் அந்தக் குழுக்களுக்கு எதிராக
தாக்குதல் நடத்துகிறது.


அந்த ஆயுதக் குழு அதன் போலியான லட்சியத்தை அடைவதற்காகப்
போராடுகிறது.

அமெரிக்காவோ இரண்டு தரப்புகளுக்கும் ஆயுத மற்றும் நிதி உதவிகளை வழங்கி இரு தரப்புகளுக்குமிடையிலான போரை உக்கிரமடையச் செய்து தனது இலக்கை அடைகிறது.

இந்தப் போரால் ஒருபுறம் மக்கள் அழிகிறார்கள். மறுபுறம், அந்த நாடு அரசியல் மற்றும் பொருளாதாரம்  பலவீனமடைகின்றது. இவற்றை நிவர்த்தி செய்வதற்காக அந்த
நாட்டுக்கு உதவுதல் என்ற பெயரில் அமேரிக்கா அந்த நாட்டின் அரசைக்
கைக்குள் போட்டுக் கொள்கிறது.தன் சொற்படி ஆட வைக்கிறது.

இவ்வாறு எல்லா முஸ்லிம் நாடுகளையும் பலவீனப்படுத்தி தனது
கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டது அமெரிக்கா. இந்த நாடுகள் தங்கள் நாட்டின் பிரச்சினைகளையே கவனிப்பதற்கு நேரமில்லாமல் இருப்பதால் ஏனைய
நாடுகளில் உள்ள முஸ்லிம்களின் பிரச்சினைகளை தீர்க்க இயலாமல் அல்லது மனமில்லாமல் இருக்கின்றன. அந்த மனோநிலை- சூழல் அமெரிக்காவால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டு விட்டன.

முஸ்லிம்களையும் முஸ்லிம் நாடுகளையும் மாத்திரம் குறி வைத்து அமெரிக்கா ஏன் இவ்வாறு செய்ய வேண்டும் என்ற கேள்வி உலக அரசியல்பற்றி சரியாகத்
தெரியாதவர்களுக்கு எழலாம்.

அவர்களின் சர்வாதிகாரத்துக்கு வேட்டு வைக்கும் வகையில் கிலாபத் ஆட்சி மலர்ந்துவிடும் என்ற அச்சமே அதற்கு காரணம்; முழு உலகையும் ஆட்சி செய்யக்கூடிய பலம் முஸ்லிம்களிடம்-முஸ்லிம் நாடுகளிடம் இருப்பதுதான் காரணம்.

இவ்வாறான கிலாபத் முறைமை அமேரிக்கா போன்ற வல்லரசை பலவீனமாக்குவதால்தான்
இந்த கிலாபத்தே இனி வரக்கூடாது என்று மேற்குலகம் சதி செய்கிறது.

1924 இல் உஸ்மானிய கிலாபத்தை சதி மூலம் வீழ்த்திய இந்த மேற்குலகம் அன்று முதல் இந்த கிலாபத்தின் மீள் எழுச்சியைத் தடுப்பதற்கான சதியில் ஈடுபட்டு வருகிறது.

முஸ்லிம் நாடுகள் அனைத்தும்-முஸ்லிம்கள் அனைவரும் ஒன்று சேரும் போதுதான் கிலாபத் ஆட்சி  உருவாகும்.

அந்த ஒன்றிணைவைத் தடுப்பதாக இருந்தால் அந்தந்த நாடுகளில் உள்நாட்டுப் பிரச்சினைகளை ஏற்படுத்தி அந்த நாடுகளை பலவீனப்படுத்த வேண்டும்  -மற்றைய முஸ்லிம் நாடுகளைப் பற்றியோ முஸ்லிம்களை பற்றியோ அக்கறை கொள்ளாத ஒரு நிலையை ஏற்படுத்த வேண்டும். அதுதான் இப்போது
நடக்கின்றது.

ஒரு முஸ்லிம் நாட்டைத் தாக்குவதற்கு மற்றைய முஸ்லிம் நாடுகள்
அமெரிக்காவுடன் இணைந்து செயற்படுவதை நாம் காண்கிறோம்.

பலஸ்தீன் மற்றும் காஷ்மீர் விவகாரத்தில் இந்த முஸ்லிம் நாடுகள்  எப்படி அக்கறை இன்றி செயற்படுகின்றன என்பதை நாம் அறிவோம்.

இந்த உலகத்தை தாமே ஆட்சி செய்ய வேண்டும் என்று அமெரிக்கா உள்ளிட்ட
சக்திகள் விரும்புகின்றன.

இஸ்லாமிய கிலாபத் ஆட்சி இருந்தபோது இந்த சக்திகளால் தலைதூக்க முடியவில்லை. மிகவும் சிரமப்பட்டு- சதி செய்து 1924 இல் உஸ்மானிய கிலாபத்தை கவிழ்த்த பின்தான் இந்த சக்திகள் உலகை ஆட்சி செய்யத் தொடங்கின.

இறுதி கிலாபத் வீழ்ச்சி அட்டைந்ததும் முஸ்லிம்களின் பலம்
குன்றியது.ஒன்றிணைந்திருந்த முஸ்லிம் நாடுகள் துண்டாடப்பட்டன.

கிலாபத்தின் கீழ் இருந்த பலஸ்தீன் யூதர்களால் மிக இலகுவாக கைப்பற்றப்பட்டு அங்கு
இஸ்ரேல் என்ற யூத நாடு உருவாக்கப்பட்டது.


கிலாபத்தின் நன்மைகள்
================
மறுமைக்கு எங்களை எவ்வாறு தயார்படுத்த வேண்டும் என்று மாத்திரம் இஸ்லாம்
சொல்லித் தரவில்லை.

வாழும்போது இந்த உலகில் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள
வேண்டிய முறை,பொருளாதாரம் மற்றும் அரசியல் போன்றவற்றையும் சொல்லித் தருகின்றது.

அவ்வாறு சொல்லித்தரப்பட்ட அரசியலில் ஒன்றுதான் கிலாபத் ஆட்சி முறை. உலக முஸ்லிம்களின் ஒற்றுமையால்தான் இந்த ஆட்சி முறை உருவாகிறது. அந்த ஒற்றுமைதான் அதன் பலம்.1924 ஆம் ஆண்டு வரை மிகவும் வெற்றிகரமாக
செயற்பட்டு வந்த ஆட்சி முறை இது.

முஸ்லிம் நாடுகள் அனைத்தையும் ஒரே கூரையின் கீழ் கொண்டுவந்து ஓர் அரசால் ஆட்சி செய்யப்படும் மிக பலமிக்க கிலாபத் முறையால் மாத்திரம்தான் உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் பாதுகாப்பை வழங்க முடியும்; தற்போது முஸ்லிம்களுக்கு ஏற்பட்டிருக்கும் பிரச்சினைகள் அனைத்துக்கும் தீர்வை வழங்க முடியும்.

முஸ்லிம் அல்லாத நாடுகளில் வாழும் முஸ்லிம்களின் பாதுகாப்புக்கும்
கிலாபத் முறைமைதான் ஒரே வழி.

அவ்வாறான நாடுகளில் உள்ள முஸ்லிம்களுக்கு பிரச்சினைகள் ஏற்படுமாக இருந்தால் அந்த நாடுகளின் அரசுகளுக்கு அழுத்தம்
கொடுக்கக்கூடிய பலம் கிலாபத்துக்கு உண்டு.

முஸ்லிமகள்- முஸ்லிம் நாடுகள் ஒன்றுபட்டால் கிலாபத் மீண்டும் மலரும். 54 நாடுகளுக்கும் பொதுவாக மத்தியில்  ஓர் அரசே. இருக்கும்.அந்த அரசு எடுக்கும் தீர்மானத்தையே 54 நாடுகளும் நிறைவேற்றும்.

அப்போது தனித்தனியாக இயங்குகின்ற ஏனைய நாடுகளைவிட ஒன்றிணைந்த முஸ்லிம்
நாடுகள் இராணுவக் கட்டமைப்பிலும் நிதிக் கட்டமைப்பிலும் பலமிக்கதாக
இருக்கும். அமேரிக்கா போன்ற சக்திகளிடம் இருந்து வரும் எல்லா
எதிர்ப்புகளையும் சவால்களையும் மிக இலகுவாக வெற்றி கொள்ளும்.

முஸ்லிம் நாடுகளில் வாழ்கின்ற முஸ்லிம்கள் மாத்திரமன்றி முஸ்லிம் அல்லாத நாடுகளில் வாழ்கின்ற முஸ்லிம்களுக்கும் இந்த முறைமை மிகப் பெரிய பாதுகாப்பாக இருக்கும். இந்தியா, இலங்கை மற்றும் மியன்மார் போன்ற நாடுகளில் முஸ்லிம்கள் இப்போது எதிர்நோக்கி வரும் அபல நிலை அப்போது இருக்காது.

முஹம்மது நபி [ஸல் ] அவர்கள் முதல் உஸ்மானிய கிலாபத் வரை 109 கலீபாக்கள் கிலாபத் முறையின்கீழ் ஆட்சி செய்துள்ளனர்.

அவர்களின் ஆட்சியின்கீழ்
முஸ்லிம்கள் மாத்திரமன்றி முஸ்லிம் அல்லாதவர்களும் நிம்மதியாகவே
இருந்தனர்.

இலங்கை முஸ்லிம்களுக்கான பாதுகாப்பு
================
தற்போது இலங்கை முஸ்லிம்கள் எதிர்நோக்கி இருக்கும் பாதுகாப்புப்
பிரச்சினைக்குத் தீர்வாக இன ஒற்றுமை, அது, இது என்றெல்லாம் பல யோசனைகள் முன் வைக்கப்படுகின்றன.

அவையும் தேவைதான். மறுக்கவில்லை. ஆனால், அவை நிரந்தரத் தீர்வு அல்ல. ஓரிரு நாட்கள் மாத்திரமே தாக்குப் பிடிக்கும். மீண்டும்
பிரச்சினைகள் எழும்.

அழுத்கம கலவரத்துக்கு பின் எப்படி காலி கிந்தோட்டை கலவரம்
ஏற்பட்டதோ- கிந்தோட்டை கலவரத்துக்குப் பின் எப்படி அம்பாறை சம்பவம் இடம்பெற்றதோ- அம்பாறை சம்பவத்துக்குப் பின் எப்படி கண்டிக் கலவரம் ஏற்பட்டதோ அப்படியே இன்னும் பல சம்பவங்கள் தொடராக இடம்பெறவே செய்யும்.

தற்காலிகமாக ஓய்வு பெறுவதும் பின்பு தொடருவதும் என இந்தப்
பிரச்சினைகள் இருந்து கொண்டே இருக்கும்.

ஆனால், கிலாபத் அரசு இருக்கின்றபோது அந்த அரசு உடனடியாக இவ்வாறான
பிரச்சினைகள் மீது கவனம் செலுத்தும்.

அந்த அரசு எடுக்கும் சில பாரதூரமான
முடிவுகள் தங்கள் நாட்டின் பொருளாதாரம் உள்ளிட்ட பல விடயங்களை பாதிக்கும் வகையில் அமையும்போது முஸ்லிம்களுக்கு நிரந்தர பாதுகாப்பை வழங்குவதற்கு சம்பந்தப்பட்ட அரசுகள் நிர்பந்திக்கப்படும்.

உதாரணத்துக்கு கண்டிக் கலவரத்தால் நாட்டின் சுற்றுலாத் துறையில் 10 வீத
வீழ்ச்சி ஏற்பட்டது.

இந்த நிலையில் கிலாபத் ஆட்சி இருந்திருந்தால் முழு
சுற்றுலாத் துறையும் வீழ்ச்சி கண்டிருக்கும்.

கிலாபத் அரசின் உத்தரவுக்கு
அமைய முஸ்லிம் நாடுகள் அனைத்திலும் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருவதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டிருக்கும்.

இவ்வாறான அழுத்தகங்கள் பிரயோகிக்கப்படுகின்ற போது இலங்கை அரசு விழுந்தடித்துக் கொண்டு முஸ்லிம்களை பாதுகாத்திருக்கும். ஆனால், முஸ்லிம் நாடுகள் பிரிந்து நின்று தங்களுக்குள்ளே சண்டை பிடித்துக் கொண்டிருப்பதால் அந்த நாடுகளுக்கு  இலங்கை முஸ்லிம்களைப் பற்றி நினைத்துப் பார்க்கக்கூட
நேரமில்லாமல் இருக்கின்றது.

ஆகவே, முதலில் முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். கிலாபத் மீள் உருவாக்கத்துக்காக உழைக்க வேண்டும்.

ஐ.எஸ்.பயங்கரவாதிகள் போன்றவர்கள் முன்வைக்கின்ற போலிக் கிலாபத்துக்கு எதிராக செயற்பட வேண்டும்.

எமது ஒற்றுமை இன்ஷா அல்லாஹ் நிச்சயம் வெற்றியைக் கொண்டு வரும்.

[எம்.ஐ.முபாறக் ]

Comments

கிலாபா ஏன் தேவை?

மஹ்தி (அலை) அவர்களை பற்றிய குறிப்பு..

உதுமானிய கிலாபா!!!

முஹம்மத் அல் ஃபாத்திஹ்!!!