சிரியாவின் விவகாரம் சில புரிதல்கள்!!!

சிரியாவின் விவகாரம் சில புரிதல்கள்...


சுயலாபம், ஆதிக்க வெறி, பிராந்திய கட்டுப்பாடு போன்ற பல்வேறு இலக்குகளை கொண்ட அரசுகளும் அதற்கு சார்பானதும் எதிரானதுமான இயக்கங்களும் வெவ்வேறு கோணங்களில் இணைந்தும் பிரிந்தும் நடத்தும் யுத்த சதுரங்கமே தற்போதைய சிரியாவாகும். 

ஆனால் இதற்கும் அப்பால் சத்தியத்திற்கான ஒரு போராட்டமும் எதிர்பார்ப்பும் அங்கு இல்லையென்று யாராவது கூறினால் அவர்கள் சிரியா பற்றிய வஹியின் முன்னறிவிப்புகளை பற்றியும் இஸ்லாமிய கோட்பாட்டு அடிப்படையில் அப்பிரதேசத்தின் கேந்திர முக்கியத்துவம் பற்றியும் தெரியாத ஒருவராக அல்லது தெரிந்தும் மறுக்கும் ஒருவராகவே இருக்கமுடியும்.



உண்மையில் ஜெஸ்மின் புரட்சியின் ஓர் அங்கமாகவே பஷர் அல் ஆசாத்துக்கு எதிரான மக்கள் எதிர்ப்புகள் சிரியாவில் ஆரம்பித்தது. அதாவது மக்கள் எதிர்பார்ப்பு ஒரு அதிகார மாற்றத்துக்கான தேடலாகவே தொடங்கியது. அதுவரை முதலாளித்துவ மேற்குலகுக்கோ அல்லது அவர்களுக்கு சேவகம் புரியும் மத்திய கிழக்கு மற்றும் பால்க்கன் நாடுகளுக்கோ ஒரு சிக்கலாக இருக்கவில்லை.

ஆனால் ஆட்சி மாற்றம் பற்றிய மக்களின் கோரிக்கை ஷரீஆ வழியில் ஆட்சி மற்றும் கிலாபா என்ற கேள்வியாக கோசமாக வெளிவந்த போதே நிலமையின் பாரதூரத்தை வல்லரசுகள் முதல் அவர்களின் மத்திய கிழக்கின் சேவகர்கள் வரை புரிந்து கொண்டார்கள். எனவே அவர்களுக்கு ஆபத்தான இந்த சிந்தனையை கூட்டாகவும் பிரிந்தும் அழிக்கும் முடிவுக்கு வந்தனர்.



இதற்கு சாதகமாக பஷர் அல் ஆசாத் தரப்பு மக்கள் எதிர்ப்பை கட்டுப்படுத்த வன்முறையை பாவித்தது. இது எதிர் வன்முறைக்கான அரசியல் நியாயத்தை சிரியாவின் மக்கள் மத்தியில் விதைத்தது. இந்த சந்தர்ப்பத்தையே எதிர்பார்த்திருந்த வல்லரசுகளும் அவர்களின் மத்திய கிழக்கின் சேவகர்களும் ஒரு உள்நாட்டு யுத்தமாக அதை படறவிட உதவிபுரிந்தனர்.
சிரியாவின் இராணுவத்திலிருந்து பிரிந்து வந்த சில ஜெனரல்கள் தளபதிகள் என பஷருக்கெதிரான சண்டைக்களம் விரிவடைந்தது. 

இதில்  தமக்கு சாதகமான நிர்ணயங்களை செய்ய அங்கு போராடிய பல்வேறு போராட்டக் குழுக்களை தளபாட மற்றும் பின்தள உதவியூடாக பக்குவமாக வல்லரசுகளும் அவர்களின் மத்திய கிழக்கின் சேவகர்களும் வசப்படுத்தினர். துரோகம் வஞ்சகம் ஆதிக்க சிந்தனை என்பன இயக்கங்களை இயக்க களம் பஷர் அல் ஆசாத் தரப்புக்கு சாதகமாக மாறியது.



எது எப்படியோ வல்லரசுகளினதும் அவர்களின் அரபு நாட்டு சேவகர்களினதும் ஒரே எதிர்பார்ப்பு சிரியாவின் அரசியல் மாற்றம் ஒரு இஸ்லாமிய ஆதிக்க மாற்றமாக வந்துவிடக்கூடாது என்பதேயாகும். ஆனால் வஹியின் முன்னறிவிப்புகளை வைத்து பார்க்கும் போது சத்தியத்திற்கு சார்பான ஒரு நல்ல சக்தி சிரியாவில் இருக்கும் என்பது தெளிவு. 

அதை தற்போது சரியாக இனங்காண முடியாத குழப்பம் நிலவுகிறது. மிகச் சொற்பமாக போராடி வெற்றிபெறும் அந்த கூட்டத்தை ஒரு பேரழிவின் பின்னரே யாராலும் கண்டுகொள்ள முடியும். அந்த இறுதி வெற்றிவரை சிரியாவின் நிலமை ஒரு மூடுமந்திரமாகவே நிச்சயமாக இருக்கும்.

- Abdur Raheem

Comments

கிலாபா ஏன் தேவை?

மஹ்தி (அலை) அவர்களை பற்றிய குறிப்பு..

உதுமானிய கிலாபா!!!

முஹம்மத் அல் ஃபாத்திஹ்!!!