நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு அரசியல் அதிகாரத்தை அடைந்து கொண்டார்கள்? தொடர் - 2

நுஸ்ரா கோருதல்:-

நபி(ஸல்) அவர்கள் நுபுவத்தின் பத்தாவது வருடம் அளவில் மக்கா சமூகம் தொடர்பாக ஒரு தெளிந்த நிலைப்பாட்டுக்கு வருகிறார்கள். அதுதான் இதுவரை மேற்கொள்ளப்பட்ட இஸ்லாமிய அழைப்பு மக்கா சமூகத்தை பொருத்தவரையில் நேர்மறையாக தொழிற்படவில்லை, அந்த சமூகம் இஸ்லாமிய சிந்தனைகளையும், எண்ணக்கருக்களையும் தமது பொதுக்கருத்தாகக் கொள்வதற்கு தயார்நிலையில் இல்லை என்ற அரசியல் புரிதலாகும்.

இந்தக் காலகட்டத்தில்தான் அல்லாஹ்(சுபு) நுஸ்ரா வைக்கோருவது பற்றிய கட்டளையைப் பிறப்பிக்கிறான். நுஸ்ரா என்பது நல்லாதரவு என்று பொருள்படும். நஸ்ர் என்பது அநீதிக்குள்ளாக்கப்பட்டவர்களுக்கு உதவுவதைக் குறிக்கும், அன்ஸார்கள் என்போர் நல்லாதரவு நல்குவோரும், ஒடுக்கப்பட்டவர்களை விடுவிப்போருமாவார்கள்.

“தக்கீப் கோத்திரத்தவர்களிடமிருந்து நுஸ்ராவைக் கோருவதில் நபி(ஸல்) அவர்களின் முனைப்பு” என்ற தலைப்பில் இப்னு ஹிஸாம் தனது வரலாற்று நூலில் ஒரு தலைப்பிட்டு விளக்குகிறார்கள். அபுதாலிப் இறந்ததன் பின்னால், குறைஷிகளின் துன்புறுத்தல் மிகவுமே அதிகரித்துவிட்டது. அந்தளவிற்கான துன்புறுத்தலை அவர் உயிருடன் இருக்கின்றபோது அவர்களுக்கு செய்யக்கூடியதாக இருக்கவில்லை. இவ்வாறு துன்புறுத்தல்கள்

அதிகரித்ததன் பின்னால் “ நபி(ஸல்) தமக்கு உதவியும், பாதுகாப்பும் தருமாறு கோருவதற்காகவும், தனக்கு அல்லாஹ்(சுபு)விடமிருந்து அருளப்பட்டதை ஏற்றுக்கொள்ளுமாறு கோருவதற்காகவும் தாயிப்பை நோக்கிச் சென்றார்கள். அவர் தாயிப்புக்கு தனியாகவே சென்றார்கள்.” என இப்னு இஷாக் குறிப்பிடுகிறார்.

இப்னு ஹஜரின் பத்ஹுல் பாரியில் இப்னு அப்பாஸ்(ரழி) அறிவிப்பிலும், ஹாக்கீமிலும், அபுநுஐமிலும், நல்ல அறிவிப்புடன் பைஹக்கியின் தலைலிலும் அலி(ரழி) கூறியதாக பின்வரும் செய்தி வருகின்றது.

“அரபுக்கோத்திரங்களை அணுகுமாறு நபி(ஸல்) அவர்களுக்கு அல்லாஹ்(சுபு) கட்டளையிட்டபோது, நானும், அபுபக்ரும் (ரழி), நபி(ஸல்) அவர்களுடன் மினாவில் அமைந்திருந்த அரபுக்கோத்தரங்களின் கூடாரங்களை அடையும் வரையில் இணைந்து சென்றோம்.” இந்த ஆதாரத்தின்படி அரபுக்கோத்திரத்தை அணுகி உதவி கோருங்கள் என்ற கட்டளையும், அந்த கட்டளை வந்த தருணமும் அல்லாஹ்(சுபு)வால் தீர்மானிக்கப்பட்டது என்பது புலனாகிறது.

நபி(ஸல்) அவர்களுக்கிருந்த கடைசி அரணான அபுதாலிப்பின் அரவணைப்பும் இல்லாது போன தருணத்தில் அல்லாஹ்(சுபு)விடமிருந்து வந்த இந்தக் கட்டளை காலத்தின் தேவையாகத் தென்பட்டது. இனிமேல் நபி(ஸல்) அவர்களின் உயிருக்கு எந்த உத்தரவாதமும் இல்லாத நிலை.
அவர்களின் அழைப்புப்பணி ஸ்தம்பிக்க வேண்டிய நிலை. குறைஷிகள் இஸ்லாத்தின் அழைப்பு தொடர இனிமேல் முற்றாக சம்மதிக்க மாட்டார்கள் என்ற நிலை.

மறுபக்கம் மக்கா சமூகமும், அதன் பொதுக்கருத்தும் இஸ்லாத்தின் அழைப்புக்கு எதிராக இருந்த காரணத்தினால் நபி(ஸல்) அவர்களுக்கு அதிகாரத்தை பெற்றுத்தர மக்கள் உதவ மாட்டார்கள் என்ற நிலையில் இந்தக் கட்டளை வந்தது அதுவரை இருந்த அழைப்பு பணியின் பாதையில் இன்னுமொரு முக்கிய திருப்பமாக அமைந்தது.

நுஸ்ராவின் விளைவுதான், தஃவாவை உத்வேகப்படுத்தவும், இஸ்லாத்திற்கு பாதுகாப்பையும், அதிகாரத்தையும் வழங்கி அதனை முழுமையாக அமல்படுத்தவும் உதவும் என்ற யதார்த்தத்தில் இறங்கிய அந்தக் கட்டளை நபி(ஸல்) அவர்களின் இறுதி வெற்றிக்கு பாதையைத் திறந்தது.

- பேனா

Comments

கிலாபா ஏன் தேவை?

மஹ்தி (அலை) அவர்களை பற்றிய குறிப்பு..

உதுமானிய கிலாபா!!!

முஹம்மத் அல் ஃபாத்திஹ்!!!